41 பேர் பலிக்கு தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காரணம்: பாஜ ஆய்வு குழு தலைவர் எம்பி ஹேமமாலினி குற்றச்சாட்டு
கரூர்: விஜய் கூட்டத்தில் 41 பேர் பலிக்கு தவெக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே காரணம் என எம்பி ஹேமமாலினி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியான சம்பவ இடத்தை பாஜ சார்பில் அமைக்கப்பட்ட ஹேமமாலினி தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து பொதுமக்களிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் ஹேமமாலினி எம்பி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தனை ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோல் நடந்ததில்லை. இதன் உண்மை தன்மையே ஆய்வு செய்ய ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்பிகள் எட்டு பேர் அறிவிக்கப்பட்டு இன்று (நேற்று) சம்பவம் நடத்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அங்குள்ள பொதுமக்களிடமும் நடந்த சம்பவம் குறித்து கேட்கும்போது அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் விழுந்தும், கூட்ட நெரிசலில் சிக்கியும் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். விஜய்யை காண வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்கள், குழந்தைகள், சிறு வயதினர் அதிக அளவில் வந்துள்ளனர். பிரசார பரப்புரைக்கு தேர்வு செய்யப்பட்ட வேலுச்சாமிபுரம் மிகக்குறுகலாக உள்ளதாகவும், விஜய் பிரபலமான நடிகர் என்பதால் அவரை காண அதிகளவு மக்கள் கூடியுள்ளனர்.
விஜய்யின் பிரசாரப் பேருந்து நீளமாக இருந்ததால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட அதுவும் காரணம் என்றும், மேலும் அங்குள்ளவர்களிடம் விசாரிக்கையில் விஜய் பேச ஆரம்பித்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் எதேச்சையாக நடந்த சம்பவம் போல் தெரியவில்லை என்றும், பிரசார பரப்புரை நடத்துவதற்கு பெரிய கிரவுண்ட் போல் உள்ள இடத்தை அளித்திருக்கலாம். ஆனால் குறுகலான இடத்தில் அனுமதி ஏன் அளிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காரணம் என்றாலும், இந்த இடத்திற்கு காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதி அளித்தது ஏன், இதற்கு யார் பொறுப்பேற்பார்கள். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததை அறிக்கையாக தலைமைக்கு கொடுக்க உள்ளோம். அவர்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
* தமிழ் நடிகைக்கு தமிழை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அண்ணாமலை
கரூரில் விஜய் பொதுக்கூட்டம் நடந்த இடத்தை பாஜ எம்பி ஹேமமாலினி தலைமையிலான எம்பிக்கள் குழு நேற்று பார்வையிட்டு, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் எம்பிக்கள் விசாரித்தனர். அதில் நேரில் பார்த்த ஒருவர் தமிழில் விளக்கியபோது, தமிழ் நடிகையும் நன்றாக தமிழ் தெரிந்தவரான ஹேமமாலினிக்கு, அதை அருகில் இருந்த முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னார். இதை பார்த்த மக்கள், தமிழ் நடிகைக்கு தமிழில் பேசியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் நமது அண்ணாமாலையின் திறமையோ திறமை என்று கலாய்த்து வருகின்றனர்.
* விபத்தில் சிக்கிய ஹேமமாலினியின் கார்
ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் கோவையில் இருந்து கார்கள் மூலம் கரூர் கிளம்பினர். பாஜ நிர்வாகிகள் 25 க்கும் மேற்பட்ட கார்களில் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஹேமமாலினி, அனுராக் தாகூர், நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒரே காரில் சென்றனர். கோவை - அவினாசி சாலையில் சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் திடீரென வேகத்தை குறைத்துள்ளன. இதனால் ஹேமமாலினி சென்ற காரின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஹேமமாலினி காருக்கு பின்னால் வந்த பாஜ நிர்வாகி ஒருவரின் கார் ஹேமமாலினி கார் மீது லேசாக மோதியது.இதில் ஹேமமாலினி சென்ற காரின் பின்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்ட நிலையில், பின்னால் வந்த காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாததால் ஹேமமாலினி, அவர் பயணம் செய்த அதே காரில் கரூர் புறப்பட்டு சென்றார்.