Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் இடைத்தரகர்கள் விவரத்தை தாக்கல் செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த அதிமுக ஆட்சியின் போது பேக்குவரத்துத்துறையில் வேலைக்கு பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” இந்த விவகாரத்தில் உள்ள அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதே இந்த மனுவின் சாராம்சம் ஆகும். இந்த வழக்கில் சுமார் 2000த்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையை தாமதப்படுத்துகிறது. இதே நிலை நீடித்தால் விசாரணை தற்போது முடிவடையாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”ஒவ்வொரு வழக்கிலும் 900 மற்றும் 1000 என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை இருந்தால் விசாரணை எப்போது முடிவடையும்?. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முடியாது. இது சிஸ்டம் மீதான ஒரு மோசடி எனவே இந்த விவகாரத்தில், அமைச்சரைத் தவிர, கூறப்படும் மற்ற இடைத்தரகர்கள் யார், அமைச்சரின் பரிந்துரையின் பேரில் செயல்பட்டதாகக கூறப்படும் அதிகாரிகள் யார், வேலைக்கு எடுக்கும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் யார், பணம் பெற்றுக்கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கிய அதிகாரிகள் யார். என்ற விவரங்களை நாங்கள் அறிய விரும்புகிறோம். அதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்தனர். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர்,” இந்த வழக்கு தொடர்பான விவரங்களை ஒரு சிறு குறிப்பாக தாக்கல் செய்கிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.