வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நிறுத்தப்படாவிட்டால் பீகார் தேர்தலை புறக்கணிப்போம்: தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை
பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு சட்டப்பேரவைக்கு சென்றனர்.
சட்டப்பேரவைக்கு வெளியேயும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ்,’வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் உடனடடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி தேர்தலை புறக்கணிக்க தயங்காது. தேர்தல் வெற்றியாளர் யார் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும்போது, அப்படி ஒரு தேர்தலை நடத்துவதால் என்ன பயன் இருக்கிறது?’ என்றார்.