புதுடெல்லி: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திங்களன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை துவங்கி உள்ளது. இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக பி.சி.மோடியை நியமித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களவை செயலகத்தின் இணைச் செயலாளர் கரிமா ஜெயின் மற்றும் மாநிலங்களை செயலகத்தின் இயக்குனர் விஜய்குமார் ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.