சிறுபான்மை, பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான உதவித்தொகையை நிறுத்துவதா? ஒன்றிய அரசுக்கு மாணவர் இயக்க கூட்டமைப்பு கண்டனம்
சென்னை: சிறுபான்மை, பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான உதவித் தொகையை நிறுத்தியுள்ள ஒன்றிய அரசுக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் (எப்எஸ்ஓ-டிஎன்) ஆலோசனை கூட்டம் சென்னை அன்பகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமை தாங்கினார்.
இதில் திமுக கூட்டணிக் கட்சியின் மாணவர் அணியின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், ‘தேசியக் கல்விக் கொள்கையின் வழி குருகுலத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நேரடியாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனங்கள், ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எப்எஸ்ஓ துணை நிற்கும். இதனால்தான் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கனவைச் சிதைத்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுதான் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துகிறார்கள் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் ஆட்சியாளர்கள். சாதிய சனாதனத்தைத் தூக்கிப்பிடித்து, குருகுல கல்வியை வளர்ப்பதன் மூலமாக ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கப் பார்க்கிறார்கள். பழக்கவழக்கம் என்ற பெயரில், சமூகநீதிக்கு எதிராகவும் அறிவியலுக்கு எதிராகவும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களை விஷத்தை பரப்பும் ஒன்றிய பா.ஜ. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்.
சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் சாமானியனும் உயர்கல்வி பெறும் வாய்ப்பை எளிமையாக்க பல்வேறு தலைவர்களின் பலகட்ட போராட்டங்களின் பயனாக கல்வியில் இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு உதவித் தொகையும் கிடைக்கப்பெற்றது.
ஆனால், இப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜ அரசு சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகை, அம்பேத்கர் பெயரிலான கல்வி உதவித்தொகையை நிறுத்தி இருக்கிறார்கள். சிறுபான்மை, பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான உதவித் தொகையை நிறுத்திய ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.