திருப்பதி கோயிலில் கடந்த 6 மாதத்தில் உண்டியல் காணிக்கை ரூ.666.26 கோடி: 1.29 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1.29 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.666.26 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 1.29 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 லட்சம் பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உண்டியல் வருமானம் கணிசமாக குறைந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் உண்டியல் மூலம் ரூ.666.26 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி குறைவு. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், உண்டியல் காணிக்கை குறைந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் விவரங்களின்படி கடந்த 6 மாதங்களில் இலவச, சர்வ தரிசனம், சிறப்பு தரிசனம் மற்றும் பிற சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த வசதிகள் வழங்கப்பட்டன. 99 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 6.30 கோடி பேர் அன்ன பிரசாதம் பெற்றனர். மேலும் 12.14 கோடி லட்டுகள் விற்கப்பட்டது. இவற்றில் ஜனவரி 1ம் தேதி மட்டும் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அன்று ஒரே ஒருநாள் மட்டும் ரூ.3.13 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. பக்தர்களின் வசதிக்காக, ஆன்லைன் டிக்கெட்டுகள், சிறப்பு நுழைவு தரிசனம் (ரூ.300), அறை ஒதுக்கீடு போன்ற ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
இருப்பினும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள கோடை விடுமுறையில் விஐபி தரிசனத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. உண்டியல் வருவாய் குறைந்தாலும் இலவச தரிசனத்தில் அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்து வைக்கப்பட்டுள்ளனர் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 73,576 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,227 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.23 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 12 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
திவ்ய அனுக்கிரக விசேஷ ஹோமம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி அலிபிரியில் உள்ள சப்த கோ பிரதட்சன மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் னிவாச திவ்ய அனுக்கிரக விசேஷ ஹோமம் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஒவ்வொரு நாளும் 50 டிக்கெட்டுகள் நேரடியாக அதிகாலையில் பெறும் விதமாகவும், 150 டிக்கெட்டுகள் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், னிவாச திவ்ய அனுக்கிரக விசேஷ ஹோமம் டிக்கெட்டுகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். பக்தர்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மொத்தம் 200 டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தம்பதிகள் ₹1600 செலுத்தி ஹோமத்தில் பங்கேற்கலாம். மேலும் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வரிசையில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யலாம்.