Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம்; ஓராண்டில் 6,645 புகார்கள்; 1,341 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ரயில்களில் தரமற்ற உணவு விநியோக விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர், ஓராண்டில் 6,645 புகார்கள்; 1,341 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.  இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகள் நீண்ட காலமாகப் புகார் அளித்து வரும் நிலையில், இதுகுறித்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. மா.கம்யூ கட்சியைச் சேர்ந்த எம்.பி ஜான் பிரிட்டாஸ், மாநிலங்களவையில் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் உணவு ஒப்பந்தங்கள் வழங்கப்படும் முறையில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.

பயணிகளிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான கடந்த ஐந்து ஆண்டுகளின் விவரங்களையும் அவர் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ‘2024-25ம் நிதியாண்டில் மட்டும் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகளிடமிருந்து 6,645 புகார்கள் பெறப்பட்டது. இந்தப் புகார்களின் அடிப்படையில், 1,341 உணவு விநியோக ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,995 புகார்களில் எச்சரிக்கைகளும், 1,547 புகார்களில் தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2023-24ம் ஆண்டில் 7,026 புகார்களும், 2022-23ம் ஆண்டில் 4,421 புகார்களும் பதிவாகியுள்ளன. கலப்படமான அல்லது சுகாதாரமற்ற உணவு குறித்த புகார்கள் மீது அபராதம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் கூறினார். மேலும் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களுக்கான உணவு ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் வெளிப்படையான டெண்டர் முறையிலேயே ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது. அதிக ஏலம் கேட்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது.

இதுதொடர்பான அனைத்து விவரங்களும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தற்போது, 20 நிறுவனங்களுக்கு ரயில்களில் உணவு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவின் தரத்தை மேம்படுத்த அங்கீகரிக்கப்பட்ட சமையலறைகளில் இருந்து மட்டுமே உணவு விநியோகம் செய்யப்படுகிறது. என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.