Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனங்களே தார்மீக குற்றவாளி: மதிப்பெண்ணால் மாணவர்களை பிரிக்கவும் தடை; புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள் தொடர்பான வழக்கில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை பிரிப்பதற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனம் தான் தார்மீகப் பொறுப்பு என்ற புதிய எச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆகாஷ் பைஜூஸ் என்ற நிறுவனத்தின் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதனை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு மாணவியின் இறப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து கேள்வியெழுப்பிய நீதிபதிகள் பல்வேறு முக்கிய வரையறை மட்டுமில்லாமல் வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளதில்,‘‘நீட் தேர்வால் நாடு முழுவதும் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருவது ஏன்? அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இதுபோன்ற செயல்பாடுகள் அனைத்தும் நிர்வாக கட்டமைப்பு ரீதியான தோல்வி ஆகும். இதைக்கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. கடந்த 2022ல் இந்தியாவில் பதிவான 1,70,924 தற்கொலை வழக்குகளில், 13,044 அதாவது 7.6சதவீதம் மாணவர்கள் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இவை எல்லாம் கல்வி நிலையங்கள் மாணவர்களின் மனநலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்து உள்ளதையே காட்டுகிறது.மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில், நாடு தழுவிய புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அதாவது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தகுதி வாய்ந்த மனநல ஆலோசகர் அல்லது உளவியல் ரீதியான நிபுணர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மாணவர்களின் மன அழுத்த அறிகுறிகளைக் கண்டறிவது குறித்து ஆண்டுக்கு இருமுறை கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும், மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் பிரிப்பது, பொதுவெளியில் அவமானப்படுத்துவது போன்ற செயல்களைப் பயிற்சி மையங்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம்

இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக மாநில அரசுகள் இரண்டு மாதங்களுக்குள் தனியார் பயிற்சி மையங்களுக்கு அதற்கான விதிகளை வகுக்க வேண்டும். ஒன்றிய அரசு 90 நாட்களுக்குள் இதுதொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போன்று மாணவர்களின் தற்கொலை என்பது கல்வி நிறுவனத்தின் தார்மீகப் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.