தென்னிந்தியர்களின் சாதனை வரலாற்று புத்தகங்களில் மறைப்பு: கீழடி அகழாய்வை மேற்கோள் காட்டி சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கட்ஜு வேதனை
புதுடெல்லி: தென்னிந்தியர்களின் சாதனைகள் வரலாற்று புத்தகங்களில் மறைக்கப்பட்டுள்ளதாக கீழடி அகழாய்வு முடிவுகளை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வேதனை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்த மார்க்கண்டேய கட்ஜு சமூக இணையதள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாறு குறித்த புத்தகங்கள் பெரும்பாலும் வட இந்தியாவை மையமாகக் கொண்டவை.
அவற்றில் தென்னிந்தியர்களின் சாதனைகளைப் பற்றி மிகக் குறைவாகவே வரலாற்று குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. பல்வேறு துறைகளில் தென்னிந்தியர்களின் மகத்தான சாதனைகளைப் பற்றி அறியாமல், வட இந்தியர்கள் தென்னிந்தியாவை காட்டுமிராண்டிகள் வசிக்கும் இருண்ட பூமியாக நீண்ட காலமாகவே கருதி வந்தனர். பல வட இந்தியர்கள் இன்றும், தென்னிந்தியர்களை இழிவாகப் பார்ப்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டின் மதுரை அருகே உள்ள கீழடி என்ற இடத்தில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள், கி.மு 8 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்திலிருந்தே அங்கிருந்த ஒரு பண்டைய நகர்ப்புற நாகரிகம், அங்கு கிடைத்த தொல்பொருட்களைபற்றிய ஒரு புதிய வீடியோவை யூடியூப்பில் பார்த்தேன். அது எனக்கு ஆழ்ந்த அறிவூட்டியது. 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நான் பதவியேற்றபோது, எனது ஓய்வு நேரத்தில், தென்னிந்திய குறிப்பாக தமிழர் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்தேன். அதற்கு முன் தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் குறித்த எனது அறிவு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்தது எனக்கு அவமானமாக இருந்தது.
இளங்கோவடிகளின் காப்பியமான சிலப்பதிகாரத்தைப் படிக்கும்போது. வடக்கில் கங்கை மற்றும் இமயமலையைக் கைப்பற்றிய பிறகு, தெற்கே ஆட்சி செய்த மன்னர் செழிக்கட்டும் என்ற வரிகளை நான் கண்டேன். முதலில், இது வெறும் மிகைப்படுத்தப்பட்ட கவிதை வரிகள் என்று நினைத்தேன், ஏனென்றால் நான் வட இந்திய மன்னர்கள் தெற்கே படையெடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் வட இந்தியா மீது படையெடுத்த ஒரு தென்னிந்திய மன்னரைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. பின்னர் தமிழ் மன்னர் ராஜேந்திர சோழன், இலங்கை, சுமத்ரா, தெற்கு தாய்லாந்து, முதலியனவற்றை கைப்பற்றிய வரலாற்று செய்தியை அறிந்தேன். ஒரு சக்திவாய்ந்த கடற்படையால் மட்டுமே அது சாத்தியமாக இருந்திருக்க முடியும். வட இந்தியாவின் மீது நெப்போலியன் போல் படையெடுப்பை நடத்தி கங்கை வரை மற்றும் அதற்கு அப்பால் கூட வழிநடத்தியதாக நம்பகமான செய்திகளை அறிந்து கொண்டேன். அனைத்து இந்தியர்களும் (தென்னிந்தியர்கள் உட்பட) தங்கள் பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் மவுரியப் பேரரசு, குப்த பேரரசு, ஹர்ஷவர்த்தன் பேரரசு, முகலாயப் பேரரசு மற்றும் பிறவற்றைப் படித்திருக்கிறார்கள்.
ஆனால் விஜயநகரப் பேரரசின் கிருஷ்ண தேவராயர் அல்லது சோழ மற்றும் பாண்டிய மாமன்னர்களைப் பற்றி எத்தனை வட இந்தியர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு தமிழர் வரலாறு தெரியாமல் போனது வருந்தத்தக்கது. எத்தனை வட இந்தியர்கள் சிறந்த தமிழ் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் திருக்குறள், ஆண்டாளின் திருப்பாவையை படித்திருப்பார்கள். பெண் விடுதலை குறித்த சுப்பிரமணிய பாரதியின் சிறந்த கவிதைகளைப் படித்திருப்பார்கள். தென்னிந்திய கோயில்கள் பிரமாண்டமானவை. மேலும் அவை பண்டைய மற்றும் இடைக்கால தென்னிந்தியர்களின் கட்டிடக்கலை அறிவை வெளிப்படுத்துகின்றன. பல்லவப் பேரரசின் தலைநகரான மகாபலிபுரத்தின் பண்டைய துறைமுக நகரத்தில் உள்ள பிரம்மாண்டமான பாறைச் சிற்பம் உண்மையிலேயே அற்புதமானது.
தென்னிந்தியாவில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான ரோமானிய நாணயங்கள்,ரோமானிய மாமன்னர் அகஸ்டஸ் (கிமு 27 முதல் கிபி 14 வரை ஆட்சி செய்தவர்) காலத்திலிருந்து தென்னிந்தியாவிற்கும் பண்டைய ரோமுக்கும் இடையிலான விரிவான வர்த்தகத்தைக் காட்டுகின்றன, இது பண்டைய மற்றும் இடைக்கால தென்னிந்தியாவில் பொருளாதாரத்தின் உயர் வளர்ச்சியைக் குறிக்கிறது. கீழடியில் கூட பல ரோமானிய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியர்கள், வட இந்தியர்களைப் போலல்லாமல், தென்கிழக்கு ஆசியாவில் விரிவான வணிக தொடர்புகளைக் கொண்டவர்களாக இருந்தனர்.உண்மையான ஒருமைப்பாட்டை விரும்பினால், வட இந்தியர்கள் தென்னிந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை படித்து, தென்னிந்தியர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும். இவ்வாறு கட்ஜு கூறியுள்ளார்.