மக்களவையில் எதிர்க்கட்சிகள் திடீர் அமளி; வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்தும் விவாதிக்க வேண்டும்: பிரமாண்டமான பேனர் ஏந்தி சோனியா, ராகுல் போராட்டம்
புதுடெல்லி: மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதம் தொடங்கும் முன்பாக பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் குறித்தும் விவாதம் நடத்தப்படும் என அரசு உறுதி அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் திடீர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேர விவாதம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் அவை தொடங்கிய உடனேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் திடீரென அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திலும் விவாதம் நடத்தப்படும் என அரசு உறுதி அளித்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தை நடத்த விடுவோம் என அவர்கள் கூறினர்.
வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தால் தான் கடந்த வாரம் முழுவதும் அமளியால் இரு அவைகளும் முடங்கின. எதிர்க்கட்சிகளின் இந்த திடீர் கோரிக்கையால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடந்தது. முன்னதாக, அவை கூடுவதற்கு முன்பாக இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்று, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக பிரமாண்டமான பேனர் ஏந்தி கோஷமிட்டனர். அந்த பேனரில் ‘சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. உடனடியாக தீவிர திருத்தத்தை நிறுத்த வேண்டுமென எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி எம்பிக்கள் கோஷமிட்டனர்.
விவாதத்தில் பேச சசிதரூர் மறுப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க பல்வேறு கட்சி எம்பிக்கள் கொண்ட குழுக்களை 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒன்றிய அரசு அனுப்பி வைத்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான குழு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தது. இந்த விவகாரத்தில் சசிதரூர் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியுடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான மக்களவை விவாதத்தில் பேசுகிறீர்களா என கேட்டதற்கு சசிதரூர் மறுத்துவிட்டதாகவும், இந்திய துறைமுகங்கள் மசோதா குறித்து பேச விருப்பப்படுவதால் விவாதத்தில் பேசவில்லை என்று மறுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.
மாநிலங்களவை முடங்கியது
மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் தந்த 26 ஒத்திவைப்பு நோட்டீசையும் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் நிராகரித்தார். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. ‘வாக்குகளை திருடுவதை நிறுத்து’ என எம்பிக்கள் கோஷமிட்டு அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டனர். இந்த கூச்சல் குழப்பத்தால் பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதன் பிறகும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.