புதுச்சேரி: புதுச்சேரி, திருக்கனூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன் (10) கடந்த 2013ல் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின் துறையின் அஜாக்கிரதை காரணமாக விபத்து நடந்தது என சிறுவனின் பெற்றோர் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம் மணிகண்டன் குடும்பத்துக்கு மின்துறை ரூ.9 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், புதுச்சேரி நீதிமன்ற உத்தரவை 2025ல் உறுதிசெய்தது. மேலும் காலதாமதத்தை பரிசீலித்து ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டது.
இதனிடையே நஷ்டஈடு வழங்காததால் புதுச்சேரி தலைமை செயலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்வதற்காக தலைமை செயலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர். அவர்களிடம் மின் துறை அதிகாரிகள், சட்டத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நஷ்டஈடு வழங்க காலக்கெடு கேட்டனர். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.