2024-25ம் நிதியாண்டில் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு பூஜ்ஜியம்: உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு கோடிகளில் ஒதுக்கீடு
சென்னை: 2024-25ம் நிதியாண்டில் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என ஒன்றிய அரசே மீண்டும் உறுதி செய்துள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது. இதனால் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தேசிய கல்வி கொள்கையை ஏற்காவிடில் நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் தான் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டுக்கு, கடந்த நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாததை மத்திய அரசே மீண்டும் உறுதி செய்துள்ளது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம், 2018ம் ஆண்டு முதலே சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தை அமல்படுத்தி வருவதாக தெரிவித்தது. அதன்படி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, தொடக்கக்கல்வி, மேல்நிலைக் கல்வி உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வந்துவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.
அந்த வகையில் 2024 - 2025 நிதியாண்டில் மொத்தம் சுமார் 34 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதில் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரப்படாதது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை என ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், உத்தரப்பிரதேசத்துக்கு சுமார் ரூ.6000 கோடியும், பீகாருக்கு சுமார் ரூ.4000 கோடியும், ராஜஸ்தானுக்கு சுமார் ரூ.3000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.