Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சபரிமலையில் ஏசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல் மாற்றப்படுகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் புதிய பாடலால் சர்ச்சை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் நடை சாத்தும் போது பிரபல பாடகர் கே.ஜே. ஏசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல் இசைக்கப்படும். கோயிலில் ஒலிபெருக்கி மூலம் இந்தப் பாடல் இசைக்கப்படும் சமயத்தில் கோயிலுக்குள் அர்ச்சகர்களும் அதே பாடலை பாடுவார்கள். இதன் பின்னர்தான் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். இந்தப் பாடலை 1923ம் ஆண்டு கொன்னகத்து ஜானகி அம்மா என்பவர் எழுதியதாக கூறப்படுகிறது. ஆனால் கம்பங்குடி குளத்தூர் ஸ்ரீநிவாச ஐயர் தான் இந்த பாடலை எழுதியதாக வேறு சிலர் கூறுகின்றனர்.

1975ம் ஆண்டு மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் இசையில் வெளியான சுவாமி ஐயப்பன் என்ற படத்தில் இந்த ஹரிவராசனம் பாடல் இடம்பெற்றது. இதன் பிறகு தான் இந்தப் பாடல் பிரபலமாக தொடங்கியது. அந்த வருடம் முதல் சபரிமலையில் நடை சாத்தும் போது ஏசுதாஸ் சுவாமி ஐயப்பன் படத்தில் பாடிய இந்த ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு வரை நடை சாத்தும் போது கோயிலுக்குள் அர்ச்சகர்கள் சத்தமாக இந்தப் பாடலை பாடுவார்கள்.

இந்நிலையில் இந்த ஹரிவராசனம் பாடலை, தான் தவறாக பாடி இருப்பதாகவும், முடிந்தால் அதை மாற்றிப் பாட முயற்சிப்பேன் என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏசுதாஸ் கூறினார். ஆனால் இதுவரை அவர் இதை மாற்றிப் பாடவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் சமூக வலைதளங்களில் ஏசுதாஸ் பாடிய ஒரு ஐயப்பன் பாடல் வைரலாக பரவி வருகிறது. சபரிமலையில் இன்று முதல் நடை சாத்தும் போது பழைய ஹரிவராசனம் பாடலுக்குப் பதிலாக இது தான் பாடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது உண்மை அல்ல என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், தினகரன் நிருபரிடம் கூறியது: சபரிமலையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஏசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாடலில் சிறிய தவறு இருப்பதாகவும் அதை மாற்றிப் பாட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் நடைபெற வில்லை. வழக்கமாக இசைக்கப்படும் அதே ஹரிவராசனம் பாடல் தான் இப்போதும் இசைக்கப்பட்டு வருகிறது. அதை மாற்றும் எண்ணம் எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

* தேவசம் போர்டு தலைவரின் பதவிக்காலம் 1 வருடம் நீட்டிப்பு

திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ஒரு தலைவரும், 2 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். தற்போது தலைவராக உள்ள பிரசாந்த், கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவரின் பதவிக் காலத்தை 1 ஆண்டு நீட்டிக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி தற்போது தலைவராக இருக்கும் பிரசாந்த் 2026ம் ஆண்டு நவம்பர் வரை பதவியில் இருப்பார்.

* முன்னாள் தேவசம் போர்டு தலைவர் வாசுவிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகளான முராரி பாபு, சுதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்கத் தகடுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட 2019ம் ஆண்டில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக இருந்த வாசுவிடம் நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு பல மணிநேரம் விசாரணை நடத்தினர். இவர் இதற்கு முன்பு தேவசம் போர்டு கமிஷனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.