சபரிமலையில் பஞ்சலோக ஐயப்பன் சிலை வைக்க ஈரோடு டாக்டருக்கு தேவசம் போர்டு வழங்கிய ரகசிய அனுமதி ரத்து: கேரள உயர்நீதிமன்றம் நடவடிக்கை
திருவனந்தபுரம்: சபரிமலை சிறப்பு ஆணையாளரான ஜெயகிருஷ்ணன் சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சபரிமலையில் பஞ்சலோக ஐயப்பன் சிலை வைக்க தனக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளதாக கூறி ஈரோட்டை சேர்ந்த ஒரு பிரபல டாக்டர் தமிழ்நாட்டில் நன்கொடை வசூலித்து வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது, சபரிமலையில் ஐயப்பன் சிலை வைக்க அனுமதி கோரி தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்ததாகவும், ஆனால் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிட்டார். இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேவசம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் தேவசம் போர்டு ஆணையாளரின் அனுமதி பெறாமல் சபரிமலையில் ஐயப்பன் சிலை வைக்க தனி நபருக்கு அனுமதி வழங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் சிலை வைப்பதற்கு சபரிமலை தந்திரியிடமும் அனுமதி பெறவில்லை என்றும் தெரியவந்தது. நேற்று இந்த மனு மீது விசாரணை நடத்திய டிவிஷன் பெஞ்ச், சபரிமலையில் தனி நபருக்கு ஐயப்பன் சிலை வைக்க தேவசம் போர்டு வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது. சிலை வைப்பதற்காக நன்கொடை வசூல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யவும், வசூலித்த பணத்தை பயன்படுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் சபரிமலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான ஏடிஜிபி ஸ்ரீஜித்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சபரிமலை தந்திரியிடமிருந்து எந்த அனுமதியும் வாங்காமல் சிலை வைக்க அனுமதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.