திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மே 24ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை 2 மாதங்களை தாண்டி தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, காசர்கோடு ஆகிய வட மாவட்டங்களில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் கேரளா முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம் உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இன்று கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.