புதுடெல்லி: வெறிநாய் கடியால் டெல்லியில் 6 வயது சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக பத்திரிகையில் வெளியான கட்டுரையின் அடிப்படையில், வெறிநாய்க்கடி குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, வெறிநாய்கடியால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், ‘‘வெறிநாய் கடி சம்பவங்களால் முதியவர்களும், குழந்தைகளும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பத்திரிக்கை ஒன்றில் பார்த்தோம். அது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
குறிப்பாக நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான நாய் கடி சம்பவங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அவற்றில் பல ரேபிஸ் தொற்றுக்கு வழிவகுத்துள்ளது. இறுதியில், இந்த கொடிய நோய்க்கு பலியாவது குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் தான் என்பது தற்போது தெளிவாக தெரியவந்துள்ளது. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு தற்போது நாங்களாக இந்த விவகாரத்தில் முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும் தொடரப்பட்ட இந்த வழக்கை ரிட் மனுவாக கருத்தில் கொண்டு உரிய தேவையான வழிகாட்டுதல்கள் விரைவில் பிறப்பிக்கப்படும் ’’ என்று உத்தரவிட்டனர்.