காஷ்மீரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுலைமான் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் முக்கிய தீவிரவாதி உட்பட 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரின் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஸ்ரீநகரில் பதுங்கி இருந்ததாகவும் இவர்கள் சுமார் 20கி.மீ. தொலைவில் உள்ள டாச்சிகாம் பகுதியை நோக்கி நகர்ந்து இருக்கலாம் என்றும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து வந்தது.
இதனிடையே பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசியை பயன்படுத்துவது குறித்த சமிக்ஞையை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வீரர்கள் ‘‘ஆபரேஷன் மகாதேவ் ‘‘என்ற நடவடிக்கை தொடங்கினார்கள். ஜம்மு காஷ்மீரில் உள்ள மகாதேவ் சிகரத்தை குறிக்கும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் டாச்சிகாம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் நுழைந்து நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். வீரர்களின் துப்பாக்கி சூட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சுலைமான் என்கிற ஆசிப் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு பின் சுலைமான் தலைக்கு போலீசார் ரூ.20லட்சம் சன்மானம் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் தான் என்கவுன்டரில் சுலைமான் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த இந்த ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட மற்ற தீவிரவாதிகள் சோனாமார்க் சுரங்க தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஜிப்ரான் மற்றும் ஹம்சா அப்கானி என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள் 14 நாட்கள் தீவிரமாக கண்காணித்து திட்டமிட்டு இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் கூட்டாளிகள் கைது
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் வடக்கு காஷ்மீரின் கிரால்போராவின் சவுக்கிபாலில் உள்ள மார்சரி கிராமத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். இங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளின் கூட்டாளி வாலி முகமது மீர் என்பவரை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் கூட்டாளியாக மீர் பணியாற்றி வருவதும் ஆயுதங்களை கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது.