புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை முடங்கியது. பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்னையை எழுப்பி வருகின்றனர். 5வது நாளான நேற்றும் மக்களவையில் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது. அவை தொடங்கியவுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் பீகார் வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்னையை எழுப்ப முயன்றனர். அவையில் எழுந்து நின்றபடி கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து அவை தலைவர் ஓம் பிர்லா, கோஷமிடுவதும், பதாகைகளை காட்டுவதும் பொருத்தமானதல்ல. உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் போராட்டங்கள் தொடர்ந்தால் அவர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.
பிற்பகல் 2மணிக்கு அவை கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதனால் அவை செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அவை தலைவராக இருந்த ஜகதாம்பிகா பால், ‘‘உறுப்பினர்களின் இந்த செயலால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மக்கள் தங்களது பிரச்னைகளை எழுப்புவதற்கு தான் உங்களை அனுப்பியுள்ளனர். நீங்கள் அவையை சீர்குலைக்கிறீர்கள். அவையை ஒத்திவைப்பது ஒரு சாதனை அல்ல. அது கவலைக்குரிய விஷயமாகும். எம்பிக்களின் தனிப்பட்ட உறுப்பினர் மசோதாக்கள் விவாதிக்கப்பட வேண்டிய நாள், அவையை சீர்குலைப்பது சரியல்ல என்றார்.
ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்பப் பெறக் கோரிய விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. அவை தொடங்கியவுடன் விவாதத்தை அனுமதிக்காமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கியபோதும் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இரு அவைகளும் திங்களன்று 11மணிக்கு மீண்டும் கூடுகிறது.
இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்;
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உட்பட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கார்கே, ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மிகப்பெரிய குப்பைத் தொட்டியை வைத்து அதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்று எழுதப்பட்டு இருந்த காகிதத்தை கிழித்து அதில் போட்டனர். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், வாக்கு வங்கியை நிறுத்துங்கள் போன்ற முழக்கங்களையும் எழுப்பினார்கள்.
திங்களன்று ஆபரேஷன் சிந்தூர் விவாதம்;
கடந்த 5 நாட்களாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டம் மற்றும் இடையூறுகளால் அவை செயல்படவில்லை. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கூட்டத்தை நேற்று கூட்டினார். அவையில் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்துவதற்கு விரும்புவதாகும், கேள்வி நேரத்தின்போது நன்னடத்தை தேவை என்றும் வலியுறுத்தினார். திங்கட்கிழமை முதல் அவை சுமூகமாக செயல்படும் என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை மேற்கொள்ள உள்ளதாக அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.


