பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு; எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக 3ம் நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் முதல் 2 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், 3வது நாளாக நேற்று மீண்டும் கூடியது. மக்களவை காலையில் கூடியதும் கேள்வி நேரத்தை நடத்த விடாமல், எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென கோஷமிட்டு பதாகைகளுடன் அவையின் மைய பகுதியை முற்றுகையிட்டனர்.
எதிர்க்கட்சி எம்பிக்களின் நடத்தையை கடுமையாக கண்டித்த சபாநாயகர் ஓம்பிர்லா, நாடாளுமன்ற விதியை மீறி பதாகைகள் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். ஆனாலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதே போல, மாநிலங்களவையில் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் விவாதம் நடத்த 25 ஒத்திவைப்பு நோட்டீஸ்களை எதிர்க்கட்சி எம்பிக்கள் கொடுத்திருந்தனர். அவை அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்ததும் அவையில் கடும் கூச்சல் கிளம்பியது. அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையை நடத்த விடவில்லை. பூஜ்ய நேரத்தின் போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து அதிகரிப்பது குறித்து பேச முயன்றார்.
வைகோவின் எம்பி பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், அவரை மட்டுமே பேச விடுமாறு துணைத்தலைவர் ஹரிவன்ஸ் வலியுறுத்தியபோதிலும், அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம்
அவை தொடங்கும் முன்பாக, நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் 2வது நாளாக இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து நடந்த இப்போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று, ‘ஜனநாயகத்தை காப்போம், வாக்கு திருட்டை நிறுத்துவோம்’ என கோஷமிட்டனர். பெரும்பாலான எம்பிக்கள் கறுப்பு உடையில் வந்திருந்தனர்.
‘தெருவில் நடந்து கொள்வதை போல செயல்படுகிறீர்கள்’
மக்களவையில் எம்பிக்களின் தொடர் அமளியில் கோபமடைந்த சபாநாயகர் ஓம்பிர்லா, ‘‘உங்களை தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கை, விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உங்களின் விவாதமும் பணிகளும் இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ தெருவில் நடந்து கொள்வதைப் போல அவையில் செயல்படுகிறீர்கள்’’ என கடுமையாக கண்டித்தார்.