ஆன்லைன் விளையாட்டு தடை கேட்ட விவகாரம் மாநில அரசுகள், செயலி நிறுவனங்கள் பதிலளிக்கவும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,‘‘போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று பல்வேறு மாநிலங்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைன் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ஏ.பால், ‘‘சூதாட்ட செயலிகள் 30 கோடி இளைஞர் சமுதாயத்துக்கு சவாலாக உள்ளன. இதுபோன்ற செயலிகளால் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இதுசார்ந்த விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்.
குறிப்பாக மாநில அரசுகள் இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இளைஞர் சமுதாயத்தை காக்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆன் லைன் சூதாட்ட நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடைக் கோரும் மனுக்கள் மீது அதுசார்ந்த செயலி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.