மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலை மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, மும்பை புறநகர் ரயில்களில் சங்கிலி தொடர்போல அடுத்தடுத்து 7 வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்தில் 180க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 12 பேரில், 5 பேருக்கு மரண தண்டனையும், எஞ்சியவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2015ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, 12 பேரும் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். மேற்கண்ட மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மகாராஷ்டிரா அரசு மற்றும் இவ்வழக்கை விசாரித்த பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மணுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என்கே சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 12 பேரை விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். இருப்பினும் விடுதலை செய்யப்பட்ட 12 குற்றவாளிகளும் மீண்டும் சிறைக்கு போக தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.