மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து வரும் 28ம் தேதி விவாதம்: மோடி கட்டாயம் பங்கேற்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் வரும் 28ம் தேதியும், மாநிலங்களவையில் மறுநாளும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தின் போது, பிரதமர் மோடி கட்டாயம் அவையில் இருக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அலுவல் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், எந்த உறுதிமொழியும் தரப்படவில்லை. அதே போல, விவாதத்தின் நிறைவாக பிரதமர் மோடி பதிலளித்து பேசுவாரா என்பது குறித்தும் இறுதி செய்யப்படவில்லை.
அதே சமயம், இந்தியா-பாகிஸ்தான் போரை அமெரிக்கா தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக கூறுவது குறித்தும், ஏன் திடீரென போர் நிறுத்தப்பட்டது, எந்த சூழலில் அந்த முடிவு எடுக்கப்பட்டது, இந்த போரால் இந்தியா சாதித்தது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்க உள்ள விவாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.