திருமலை: திருப்பதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டி மீது சிறுத்தை பாய்ந்து தாக்க முயன்றது. இதில் அவர் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார். ஆந்திர மாநிலம் திருப்பதி அலிபிரியில் இருந்து செர்லோபள்ளி செல்லும் சாலையில் நேற்றிரவு 7 மணியளவில் ஏராளமான வாகனங்கள் சென்றது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை, பைக்கில் சென்றவர் மீது திடீரென பாய்ந்து கடிக்க முயன்றது. இதனை எதிர்பாராத அவர் நிலை தடுமாறியபடி பைக்கை வேகமாக இயக்கினார். இதனால் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.
இந்த காட்சி அவ்வழியாக பைக்கை பின் தொடர்ந்து சென்ற காரில் வைக்கப்பட்டுள்ள முன்புற கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ ஆதாரமாக கொண்டு சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த வாரம் இதே சாலையில் சாலையோரத்தில் சிறுத்தை அமர்ந்து இருக்கும் காட்சியை வாகன ஓட்டிகள் கண்ட நிலையில், தற்போது அதே சாலையில் வாகன ஓட்டியை சிறுத்தை தாக்க முயன்ற சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியிலும், அப்பகுதியிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.