நீதிபதி வர்மாவை நீக்கும் தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்கப்படவில்லை: அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அறிவிப்பு
புதுடெல்லி:டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டபோது மூட்டை மூட்டையாக பணம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 21ம் தேதி மாநிலங்களவையில் நீதிபதி வர்மா பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பான எதிர்க்கட்சி எம்பிக்கள் 63 பேர் கையெழுத்திட்டு நோட்டீசை வழங்கினார்கள். இந்த நோட்டீசை அவை தலைவராக இருந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் ஏற்றுக்கொண்டார். அரசு கொண்டு வர வேண்டிய தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த உடன் தன்கார் ஏற்றுக்கொண்டது அவரது பதவி விலகலுக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் நீதிபதி வர்மா பதவி நீக்கத்துக்கான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்கப்படவில்லை என்று அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், ‘‘ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 152எம்பிக்கள் கையெழுத்திட்ட இந்த தீர்மானத்தை மக்களவை எடுத்துக்கொள்ளும். இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 21ம் தேதி மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்துக்கான நோட்டீஸ் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோன்ற தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ” என்றார்.