இணையதள மோசடி விவகாரத்தில் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது; கடும் தண்டனைகள் அவசியம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: தேனியில் ரூ.84.5லட்சம் இணையதளம் மோசடி செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அபிஜித் சிங்கை ஆஜர்படுத்த கோரியும், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் அவரது தந்தை குர்முக் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை விரிவாக விசாரணை நடத்தாமல் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அபிஜித் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ அபிஜித் சிங் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதோடு, ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘அபிஜித் சிங் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தான் ஆய்வுக் குழு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மறுத்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் குற்றவாளியின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் எந்தவித நிவாரணமும் வழங்க முடியாது. குறிப்பாக நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற கடும் தண்டனைகள் என்பது முக அவசியமான ஒன்றாக இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், அபிஜித் சிங் தந்தை குர்முக் சிங் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.