புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 26 பேர் பலியானார்கள். இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளியை இந்தியா ஏப்ரல் 30ம் தேதி முதல் மூடியது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஜூலை 24ம் தேதி வரை மீண்டும் நீட்டித்து அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி தடையை ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைவதற்கான தடை ஆகஸ்ட் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளி மூடலை ஆகஸ்ட் 24ம் தேதி வரை நீட்டித்துள்ளது.