ஓட்டலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பிரபல கிரிக்கெட் வீரர் மீது போக்சோ வழக்கு: ராஜஸ்தான் போலீஸ் அதிரடி
ஜெய்ப்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் யாஷ் தயாளைக் கைது செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், கடந்த ஐபிஎல் தொடரின்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், யாஷ் தயாள் மீது ஜெய்ப்பூர் காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சங்கானர் சதார் காவல் நிலையத்தில் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உயர வாய்ப்பு வாங்கித் தருவதாக யாஷ் தயாள் வாக்குறுதி அளித்ததாகவும், அதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அச்சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஐபிஎல் சீசனின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக ஜெய்ப்பூர் வந்திருந்த யாஷ் தயாள், சீதாபுராவில் உள்ள ஓட்டல் அறைக்கு சிறுமியை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமி தனது புகாரில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த புகாரின் பேரில் யாஷ் தயாள் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.