புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் கோராபுட்டில் உள்ள ஜெய்ப்பூர் வனச்சரகத்தின் துணை வனக்காப்பாளராக ராமச்சந்திர நேபாக் பதவி வகித்து வருகிறார். இவரது மாத வருமானம் ரூ.76,880 ஆகும். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ராமச்சந்திர நேபக்குக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின்போது, ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு வீட்டில் ரூ.1.43 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பல இடங்களில் நடந்த சோதனையில் 1.5 கிலோ தங்கம், 4.6 கிலோ வௌ்ளி, 4 தங்க கட்டிகள், 16 தங்க நாணயங்கள், இரண்டு விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு வீடு, ஜெய்ப்பூரில் 3 மாடி கட்டிடம், 3 வீடுகள் ஆகியவை தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் வனத்துறை அதிகாரி ராமச்சந்திர நேபக் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.