காந்தி, நேருவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு மலையாள நடிகர் விநாயகன் மீது கேரள டிஜிபியிடம் புகார்
திருவனந்தபுரம்,: மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்பட மறைந்த தலைவர்களுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து தெரிவித்த மலையாள நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் கேரள டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். மலையாளம், தமிழ் மொழிகளில் ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் நாயகனாக நடித்துள்ள இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவது இவரது வழக்கமாகும்.
இந்நிலையில் நடிகர் விநாயகன் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கருணாகரன் உள்பட தலைவர்களுக்கு எதிராக தன்னுடைய முகநூலில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எர்ணாகுளம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிஜோ ஜோசப், கேரள டிஜிபி ரவடா சந்திரசேகரிடம் புகார் கொடுத்துள்ளார். நடிகர் விநாயகன் மறைந்த தேசிய தலைவர்களை சமூக வலைதளத்தில் இழிவுபடுத்தி உள்ளார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் மனவேதனையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.