ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ ஆதரவாளரிடம் கட்டுக்கட்டாக பணம்: வீடியோ ஆதாரம் சிக்கியது
திருமலை: ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏவின் ஆதரவாளரிடம் கட்டுக்கட்டாக பணம் இருக்கும் வீடியோ ஆதாரம் சிக்கியது. ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.3500 கோடி மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதியப்பட்டு, சிறப்பு விசாரணை அதிகாரிகள் பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஏற்கனவே ஐதராபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்து 12 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைதான வெங்கடேஷ் நாயுடு என்பவரின் மொபைல் போனில் இருந்து ஒரு முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளது. அதில், தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கட்டுக்கட்டான பணத்தை ஒரு ரகசிய இடத்தில் சந்திரகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியின் நெருங்கிய ஆதரவாளர் வெங்கடேஷ் நாயுடு எண்ணி வைக்கும் வீடியோ இருந்தது. இவ்வழக்கு விசாரணையில் வெங்கடேஷ் நாயுடுவின் வீடியோ ஆதாரங்கள் தற்போது முக்கியமானதாக மாறியுள்ளது. இதன் மூலம், மது மோசடி வழக்கில் செவிரெட்டி கும்பல் கையும் களவுமாக பிடிபட்டதாகத் கூறப்படுகிறது.