பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்த நிலையில், 2 விளக்கங்களைக் கேட்ட மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், தீர்ப்பை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடகாவின் ஹாசன் மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பியான இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், விசாரணையின்போது நடத்தப்பட்ட சோதனையில் பிரஜ்வலின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பு வாதிட்டது. ஆனால், பிரஜ்வல் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரது செல்போன் அவரிடம் இல்லை என்றும், அதனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் பிரஜ்வல் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் கூகுள் மேப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரமாகக் கருத முடியுமா என்பது குறித்தும், பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் விளக்கங்களை சமர்ப்பித்து தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பை ஆகஸ்ட் 1ம் தேதி நீதிபதி சந்தோஷ் தெக்கண்ணவர் ஒத்திவைத்தார்.