திருமலை: தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை ஊக்குவிப்பதற்காக சோஷியல் மீடியா மூலம் விளம்பரங்களில் நடித்ததாக நடிகர், நடிகைகள் மீது தொழிலதிபர் பனிந்திரசர்மா புகார் தெரிவித்தார். அதில் பணம் பெற்றுக்கொண்டு சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக வழி நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதன்பேரில் தெலங்கானா மாநில போலீசார், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, நடிகைகள் மஞ்சுலட்சுமி, நிதி அகர்வால், பிரனீதா உள்ளிட்ட பல முன்னணி திரைபிரபலங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை இந்த ஆன்லைன் விளம்பரங்களில் நடித்ததில் எவ்வாறு பணம் பெறப்பட்டது என்பது குறித்து விசாரிக்க நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய்தேவரகொண்டா, நடிகை மஞ்சுலட்சுமி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று ஐதராபாத்தில் உள்ள அமலாத்துறை அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.