இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன: ராகுல் காந்தி கடும் தாக்கு ;விரைவில் ஆதாரங்களை வௌியிடுவதாக தகவல்
புதுடெல்லி: இந்தியாவில் தேர்தல்கள் திருடப்படுகின்றன, இதுகுறித்த ஆதாரங்கள் விரைவில் வௌியிடப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து இதுவரை நீக்கப்பட்டுள்ளனர். இது வெறும் 52 லட்சம் வாக்காளர்கள், பீகாரை பற்றியது மட்டுமல்ல. மகாராஷ்டிராவிலும் இதுபோன்ற மோசடி நடந்துள்ளது.
நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலையும், வாக்குப்பதிவின் வீடியோ பதிவையும் கேட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை தரவில்லை. அதற்கு பதிலாக விதிகளையே மாற்றி வீடியோக்களை வௌியிடாமல் பார்த்து கொண்டனர். மகாராஷ்டிராவில் பேரவை தேர்தலுக்கு முன் 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். கர்நாடகாவில் ஒரு மக்களவை தொகுதியில் விரிவாக ஆய்வு செய்தோம். அப்போது மிகப்பெரிய அளவில் வாக்குகள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
புதிய வாக்காளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி சேர்க்கப்படுகிறார்கள்? தேர்தலில் உண்மையில் யார் வாக்கு செலுத்துகிறார்கள்? எப்படி வாக்குகள் திருடப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. விரைவில் அதை வௌியிடுவோம்” என இவ்வாறு கூறினார்.