வாகன ஓட்டிகளின் அபராத பணத்தை ‘ஏப்பம் விட்ட’ பெண் ஏட்டு சஸ்பெண்ட்: ரூ.16.75 லட்சம் சுருட்டியது ஆடிட்டிங்கில் அம்பலம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் சரகத்திற்கு உட்பட்ட மூவாற்றுபுழா போக்குவரத்து காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் சாந்தி கிருஷ்ணா. கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை இவர் இந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் எர்ணாகுளம் சரக டிஐஜி அலுவலகத்தில் தணிக்கை நடைபெற்றது.
இதில், சாந்தி கிருஷ்ணா மூவாற்றுபுழா போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதமாக வசூலித்த பணத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 16 லட்சத்து 76 ஆயிரத்து 650 ரூபாய் மோசடி நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கும் அபராதத் தொகையில் சாந்தி கிருஷ்ணா தனக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதித் தொகையைத் தான் இவர் வங்கியில் செலுத்தி யது தெரியவந்தது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.