Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடும்ப வன்முறை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து இருக்கும் ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் தனது முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளின் பல பிரிவுகளின் அடிப்படையில் வழக்குகளை தொடர்ந்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட கணவர் 109 நாட்களும், அவரது தந்தை 103 நாட்களும் சிறையில் இருக்கும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கணவர் தரப்ப்பின் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த பரஸ்பர வழக்குகளால் இரு குடும்பத்தினரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்த வழக்கை விரிவாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மசிஹ் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில்,\”இரு தரப்பினருக்கும் இடையே இருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்கிறோம். அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு என்று உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடந்த அக்டோபர் 2018 முதல் பிரிந்து வாழும் தம்பதியரின் திருமணத்தையும் ரத்து செய்கிறோம். மேலும், ஐபிஎஸ் அதிகாரியான மனைவி, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்படுத்திய உடல் மற்றும் மன வேதனைக்காக நிபந்தனையின்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அந்த மன்னிப்புக் கடிதத்தை பிரபலமான ஆங்கிலம் மற்றும் இந்தி நாளிதழின் தேசிய பதிப்பிலும், அதேப்போன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் அந்த மன்னிப்பை வெளியிட வேண்டும்’ என்று தெரிவித்தது.

அதேநேரத்தில், இந்த மன்னிப்பை கணவர் தரப்பினர் மனைவிக்கு எதிராக எந்த ஒரு சட்ட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. குழந்தையின் நலன் கருதி, குழந்தை தாயின் பராமரிப்பில் இருக்கும். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தையைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும். ஒப்பந்தத்தின்படி மனைவி எந்த ஜீவனாம்சமும் பெறமாட்டார் என்று தீர்ப்பளித்தனர்.