Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

கர்நாடக அரசியலில் மீண்டும் புயல்; டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவது 200% உறுதி: காங்கிரஸ் எம்எல்ஏ அதிரடி பேட்டி

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விரைவில் மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் உறுதியாகக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்போதே, சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் அவர் ஐந்து ஆண்டுகளும் பதவியில் நீடிப்பார் என்றும், சிவகுமார் ஆதரவாளர்கள் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் நாற்காலி தொடர்பாக இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதால் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில், ராமநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இக்பால் உசேன் அளித்த பேட்டி, இந்த விவகாரத்தை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கச் செய்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டி.கே.சிவகுமார் விரைவில் முதல்வராவார் என்பது 200 சதவீதம் உறுதி; இவ்விசயம் உயர்மட்டத் தலைவர்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசிய ஒப்பந்தம்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டுத் தங்களது தலைவரை முதல்வராக்க கோரி வரும் நிலையில், இக்பால் உசேனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கட்சியில் நிலவும் இந்தத் தொடர் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர, சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவரையும் நேரில் அழைத்துப்பேசி தீர்வு காண காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.