Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தர்மஸ்தலா வழக்கை விசாரித்து வரும் எஸ்ஐடி தலைவர் பணியிடமாற்றம்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் தென்கனரா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற தர்மஸ்தலா கோயில் தொடர்பாக அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள், புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தர்மஸ்தலா கோயிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர், தர்மஸ்தலா கிராமத்தில் பல இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்களை புதைத்துள்ளதாகவும், அந்த உடல்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகார் கூறியிருந்தார்.

இதையடுத்து, கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து வருகிறது. சிறப்பு புலனாய்வு படை அதிகாரி அனுசேத் முன்னிலையில் கடந்த இரண்டு நாட்களாக தர்மஸ்தாலவின் நேத்ராவதி நதியோரத்தில் மனித உடல்களை தோண்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சிறப்பு புலனாய்வு படையின் தலைவராக இருக்கும் டிஜிபி பிரணோவ் மொஹந்தியை, கர்நாடக மாநில காவல் பணியில் இருந்து, ஒன்றிய அரசின் சேவைக்கு பயன்படுத்திகொள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதுடன், அவரை ஒன்றிய அரசு பணிக்கு எடுத்து கொள்வதாக நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, எஸ்.ஐ.டி புதிய தலைவராக மற்றொரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வர் கூறினார்.

* 25 அடி ஆழத்தில் சிவப்பு ஜாக்கெட் பான், ஏடிஎம் கார்டு சிக்கியது

தர்மஸ்தலாவில் புகார் அளித்தவரை, நேற்று முன்தினம் அதிகாரிகள் அழைத்து சென்றபோது, உடல்கள் புதைக்கப்பட்ட 13 இடங்களை காட்டினார். முதலில் அவர் காட்டிய இடத்தில், தர்மஸ்தலா நேத்ராவதி கரை அருகே உள்ள காட்டுக்கு அருகில், சுமார் 15 அடி சுற்றளவு மற்றும் சுமார் 8 அடி ஆழம் தோண்டப்பட்டது.

தொடர்ந்து, நேற்று உடல்களை தோண்டி கண்டெடுக்கும் பணி தொடங்கியது. அப்போது, புகார்தாரரால் காட்டப்பட்ட 2வது இடத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. 25 அடி ஆழம் வரை தோண்டிய போது சிவப்பு நிற ஜாக்கெட், ஒரு பான், ஏடிஎம் கார்டு கிடைத்துள்ளது. இது எஸ்ஐடி விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.