Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாடு முழுவதும் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 2000 ஐடிஐக்கள் மேம்படுத்தும் பணி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 2000 ஐடிஐக்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பிலான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை டெல்லி விஞ்ஞான் பவனில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 2,000 ஐடிஐக்கள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் பீகாரில் புதுப்பிக்கப்பட்ட முக்கியமந்திரி நிச்சய ஸ்வயம் சஹாயத பட்டா யோஜனா திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் 5 லட்சம் பட்டதாரிகள் இலவச திறன் பயிற்சியுடன் 2 ஆண்டுகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை பெறுவார்கள். பீகாரில் மாணவர் கல்விக் கடன் அட்டை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ரூ.4 லட்ம் வரை வட்டியில்லா கல்விக் கடன்கள் வழங்கப்படும். யுவ ஆயோக் திட்டத்தையும், பீகாரில் ஜனநாயக் கர்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தையும் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்வியில் ஏற்பட்ட அழிவு பற்றி தற்போதைய இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இதனால் மாணவர்கள் மாநிலத்தை விட்டு மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) ஆட்சியின் போது பீகார் மாநிலம் இப்படித்தான் இருந்தது. பாஜ கூட்டணி அரசு அமைந்ததும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.