Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊழலுக்கு எதிரான போராட்டம் எனக்கூறி யூடியூப் மூலம் தீர்ப்பு சொல்லாதீர்கள்: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: ஊழக்கு எதிரான போராட்டம் என தெரிவித்து யூடியூப் மூலமாக தீர்ப்பு சொல்லாதீர்கள் என கேரளாவில் வீடியோ வெளியிட்ட நபருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனக்கு சொந்தமான கிரைம் ஆன்லைன் என்ற யூடியூப் சேனல் மூலம் அம்மாநில பெண் அரசியல்வாதி ஒருவரை அவதூறாகவும், பாலியல் ரீதியாகவும் இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அதுதொடர்பாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்தது. அதேப்போன்று நந்தகுமார் காவல்துறை முன் சரணடையவும் உத்தரவிட்டிருந்தது. கேரளா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஜூன் 18ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் நந்தகுமாருக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டது.

ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டால், உரியப் பத்திரங்களைச் செலுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது நிபந்தனை விதித்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘பொது விவாதத்தை ஊக்குவிக்கவும், ஊழலுக்கு எதிராகப் போராடவே அந்த வீடியோ வெளியிடப்பட்டது.

இதில் எனக்கு தனிப்பட்ட வன்மமோ அல்லது சிந்தனையோ கண்டிப்பாக கிடையாது. மேலும் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் முன்னதாக மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘‘இந்த விவகாரத்தில் மனுதாரரின் செயல்பாடுகள் கடும் அதிருப்தி அளிக்கிறது. என்ன பொது விவாதம் நடத்துகின்றீர்கள்?. ஒருவரை குற்றவாளி எனத் தீர்மானித்து தீர்ப்பளிப்பதும், அவரை விடுவிப்பதும் நீதிமன்றங்களின் வேலை. இதுபோன்ற யூடியூப் வீடியோக்கள் ஒருபோதும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மாற்றாக இருக்க முடியாது.

உங்கள் யூடியூப் வீடியோக்கள் மூலம் மக்களை குற்றவாளியாக்க விரும்புகிறீர்களா. யூடியூப் சேனல்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. யூடியூப்பில் நல்ல விஷயங்களை மட்டும் பேசுங்கள். கடவுளின் தேசமான கேரளாவில் நடக்கும் நல்ல நிகழ்வுகளைப் பற்றிப் பேசுங்கள். எதிர்மறையாகப் பேசினால் தான் அதிக கவனம் ஈர்க்கும் என்பதால், இதுபோன்ற விவாதங்களை நடத்துகின்றீர்களா.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு இது சரியான வழியாக இருக்கு முடியாது’’ என்று சரமாரி கேள்வியெழுப்பினார்.  அப்போது குறுக்கிட்ட கேரளா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்ததோடு, முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் மற்றும் பாதுகாப்பையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.