Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவில் விஷம் கலந்து கொடுத்து என் மகனை கொல்ல 4 முறை சதி: மாஜி முதல்வர் ராப்ரி பகீர் குற்றச்சாட்டு

பாட்னா: உணவில் விஷம் கலந்து கொடுத்து என் மகனை கொல்ல 4 முறை சதி நடந்ததாக மாஜி முதல்வர் ராப்ரி தேவி பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியை விட்டு விலகி, பாஜகவுடன் இணைந்து புதிய அரசை அமைத்ததில் இருந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் நிலவி வருகிறது. லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீது ஒன்றிய மற்றும் மாநில விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் களம் தொடர்ந்து மோசமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், பீகார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி, தனது மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தேஜஸ்வி யாதவை நான்கு முறை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. எங்களது குடும்பத்திற்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தபோது, அவரது உணவில் விஷம் கலக்க முயற்சி நடந்தது. தற்போதுள்ள அரசுதான் இந்த சதிக்குப் பின்னால் இருக்கிறது. எனது மகனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு நிதிஷ் குமார் அரசுதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார். சட்டசபை தேர்தல் நேரத்தில் ராப்ரி தேவியின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டு, பீகார் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.