கர்னல் சோபியா குரேஷிக்கு எதிரான கருத்து; மபி பா.ஜ அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: பொறுமையை சோதிப்பதாக ஆவேசம்
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் நடவடிக்கை எடுத்த போது, இதுபற்றி பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்த கர்னல் சோபியா குரேஷி பற்றி மபி பா.ஜ அமைச்சர் குன்வர் விஜய்ஷா அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யாகாந்த், ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது கர்னல் சோபியா குரேஷிக்கு எதிரான கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்காத அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. விஜய்ஷா சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் கே.பரமேஷ்வர், அமைச்சர் பொது மன்னிப்பு கேட்டதாகவும், அது ஆன்லைனில் பகிரப்பட்டதாகவும், நீதிமன்றப் பதிவில் விரைவில் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.
இதனால் ஆவேசம் அடைந்த நீதிபதிகள்,’ ஆன்லைன் மன்னிப்பு என்றால் என்ன? அவருடைய நோக்கங்கள் மற்றும் நேர்மை குறித்து எங்களுக்கு சந்தேகங்கள் வரத் தொடங்கியுள்ளன. நீங்கள் மன்னிப்பை பதிவு செய்யுங்கள். நாங்கள் அதைப் பார்க்க வேண்டும். இப்படி மன்னிப்பு கேட்பதன் அர்த்தம் என்ன? . நாங்கள் பொது மன்னிப்பு பற்றிப் பேசுகிறோம். அது எங்கே பதிவில் உள்ளது? அவர் எங்கள் பொறுமையைச் சோதிக்கிறார். அவரது பேச்சு பற்றி ஆராய மபி அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையை ஆக.13ல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.