கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறிய எடுத்த நடவடிக்கைகள் என்ன ?: மக்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி
புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கனிமொழி ஒரு முக்கிய கேள்வியை எழுப்பி இருந்தார். அதில், ‘‘இந்தியப் பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதற்கு முதன்மையான காரணம், இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததும் இச்சோதனை பரவலாக்கப்படாததும் தான் என்பதை அரசு அறிந்திருக்கிறதா?. மேலும் கர்ப்பப் பை வாய்ப் புற்றுநோய் பற்றிய பொதுமக்களின் புரிதலை அரசாங்கம் மதிப்பிட்டிருக்கிறதா? அதுபற்றி மாநில வாரியாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சோதனை செய்துகொள்வதற்கான பரப்புரைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?.
சமூக சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், நடமாடும் சோதனை மையங்கள் மூலமாகவும், குறிப்பாக பின்தங்கிய மற்றும் கிராமப்புறங்களிலும் இவற்றை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என கேட்டிருந்தார்.
மேற்கண்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் அளித்த பதிலில், ‘‘சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இருந்தாலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சிகளில், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம், உலக புற்றுநோய் தினம் கடைபிடிப்பது மற்றும் தொடர்ச்சியான விழிப்புணர்வுக்காக அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் மூலமான பரப்புரைகள் ஆகியவை அடங்கும். மேலும், தேசிய சுகாதார மிஷன் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர்களின் விழிப்புணர்வு பிரச்சார திட்டங்களுக்காக நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையின் தற்போதைய விகிதத்தை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்று தெரிவித்தார்.