புதுடெல்லி,ஜூலை 26: பீகார் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு வாக்காளர் பட்டியலில் மேற்கொண்டு வந்த சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. பீகாரில் 7.90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நேற்று வரை 7.23 கோடி வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களை சமர்பித்துள்ளனர். இதில் 35 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளனர். சுமார் 22 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டனர்.
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 1.2 லட்சம் வாக்காளர்களின் கணக்கெடுப்பு படிவங்கள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் வாக்காளர்களில் 99.8 சதவீதத்தினர் இதுவரை தங்கள் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படும் வரைவுப் பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யும் வகையில் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை அவகாசம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.