பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்லவும் ஆலோசனை
புதுடெல்லி: மக்களவை, மாநிலங்களவையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் முடங்கின. இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு முன்வந்தது. அது தொடர்பாக விவாதம் நடந்தது.
இந்நிலையில் நேற்று மக்களவை கூடியதும் அமெரிக்க வரி விதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். அப்போது, கோஷங்களை எழுப்புவதை நிறுத்திவிட்டு தங்கள் இருக்கைகளுக்கு திரும்ப வேண்டும். நீங்கள் பிரச்னைகளை பற்றி விவாதிக்க விரும்பவில்லையா’ மக்கள் உங்களை சபையில் கோஷமிடத்தான் தேர்ந்தெடுத்தார்களா? சபை பிரச்னைகளை பற்றி விவாதிப்பதற்கானது.
உறுப்பினர்களின் நடத்தை பொருத்தமானதல்ல என்று கூறிய சபாநாயகர் ஓம்பிர்லா அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் அவை மீண்டும் தொடங்கியபோதும் சலசலப்பு ஏற்பட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரையும் பின்னர் 4 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. மாலை அவை கூடியவுடன் அமைச்சர் கோயலை பேசும்படி அவை தலைவர் அழைப்பு விடுத்தார். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக அவர் பேசி முடித்தவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையும் மதிய உணவுக்கு முன்னதாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. காலை அவை தொடங்கியதும் துணை தலைவர் ஹரிவன்ஷ், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சி எம்பிக்கள் அவை அலுவல்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் , திமுக,திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்பிக்கள், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறும் அதற்கான தேதியை குறிப்பிடுமாறும் கோரி அழுத்தம் கொடுத்தனர்.
இது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் தரப்பு ஒன்றாக அமர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று துணை தலைவர் சமாதானம் செய்ய முயற்சித்தார் ஆனால் இதனை ஏற்க மறுத்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதன் காரணமாக அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் தொடங்கியபோது, பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முடியும் வரை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்பப் பெற கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். திரிணாமுல் எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து தொடர்ந்து முழக்கமிட்டனர்.
இதன் காரணமாக அவை 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசுகையில், பிரதமர் எங்கே இருக்கிறார். அவரை தயவுசெய்துஅவைக்கு அழைக்கவும் என்று வலியுறுத்தினார். பிரதமர் அவைக்கு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதால் அவையில் மீண்டும் கூச்சம், குழப்பம் நீடித்தது. இதனால் அவை 4.30மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களுக்கு இடையே அமெரிக்க வரி அறிவிப்பு குறித்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தானாக முன்வந்து அறிக்கை வெளியிட்டு, இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறியதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விரைவில் டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்வது குறித்தும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* மாநிலங்களவையில் 30 மணி நேரம் 6 நிமிடம் வீண்
மாநிலங்களவையில் துணை தலைவர் ஹரிவன்ஷ் பேசுகையில், ‘‘தற்போதைய மழைக்கால கூட்டத்தொடரின்போது 120 கேள்விகள், 120 பூஜ்ய நேர குறிப்புகள் மற்றும் அதற்கு சமமான எண்ணிக்கையிலான சிறப்பு குறிப்புக்களை எழுப்புவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் இதற்கு மாறாக 11 கேள்விகள், மூன்று பூஜ்ய நேர குறிப்புகள் மற்றும் 17 சிறப்பு குறிப்புக்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. மொத்தம் 30 மணி நேரம் 6 நிமிடங்கள் வீணாக இழக்கப்பட்டுள்ளது” என்றார்.
* 8வது நாளாக போராட்டம்
பீகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் 8வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், ஆர்ஜேடி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் உட்பட பல எதிர்க்கட்சி எம்பிக்கள் கையில் பதாகைகளுடன் இந்த போராட்டத்தில்கலந்து கொண்டனர்.