பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மக்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை நேற்று காலை கேள்வி நேரம் தொடங்கியதும்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கைகளில் பதாகைகளை வைத்திருந்த எம்பிக்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரம் தொடரும் என்றும் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, அவையின் மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும். எனவே உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்கு செல்லுமாறு கூறினார். ஆனாலும் உறுப்பினர்களின் கூச்சலால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர், அவை மீண்டும் கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு இருந்தனர்.
இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மாநிலங்களவை நேற்று காலை கூடியது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதை மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் ஏற்க மறுத்ததை அடுத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் அவர்களை சமாதானப்படுத்த ஹரிவன்ஷ் முயன்றார். எனினும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்ததால் அவையை 12 மணிக்கு ஒத்திவைத்தார். அவை மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால்,நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
* சபாநாயகருக்கு எம்பிக்கள் கடிதம்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்த சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதி உள்ளன. பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ள நிலையில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவது கவலை அளிக்கிறது.
எனவே இது குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,மக்களவை காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய்,டி.ஆர்.பாலு(திமுக),சுப்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி),பிரேம சந்திரன்(ஆர்எஸ்பி),லால்ஜி வர்மா(சமாஜ்வாடி),ககோலி கோஷ் தஸ்திதார்(திரிணாமுல்) அரவிந்த் சாவந்த் சிவசேனா(உத்தவ்) ,அபய் குமார்(ஆர்ஜேடி) ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.