பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவை வாக்காளர் உரிமை பெற தகுதியான ஆவணம் அல்ல. இருப்பிட சான்று, பிறப்பு சான்று உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பாட்னா அருகே மசவுரி பகுதியில் ஒரு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் நாயின் புகைப்படத்துடன் அதன் பெயர், நாய் பாபு, தந்தை பெயர் குத்தா பாபு, தாய் குத்தியா தேவி என குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்றிதழில் அதிகாரியின் கையொப்பமும் இடம் பெற்றுள்ளது. சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது மாநில அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சான்றிதழை வைத்து நாய்க்கு வாக்காளர் அட்டை வழங்கப்படும். ஆனால், ஆதார் மற்றும் ரேஷன் அட்டையை தேர்தல் ஆணையம் ஏற்று கொள்ள மறுக்கிறது என சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்துள்ளனர்.