பாட்னா: பீகாரில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதியும் மீதமுள்ள122 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக நவம்பர் 11ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 14ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்து முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.வருகிற 17ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 18ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.
வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 20ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியானது இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்துஎட்டப்படாததால் வேட்பாளர்கள் பட்டியலில் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனினும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியானது நேற்று முன்தினம் 51 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.