Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீகார் சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் தலைவர்களுடன் தேஜஸ்வியாதவ் சந்திப்பு; தொகுதி பங்கீடு முடிந்த பிறகும் பா.ஜ கூட்டணியில் அதிருப்தி

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டும் அங்கு அதிருப்தி நிலை நீடிக்கிறது. அதே சமயம் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும். முதல் கட்டமாக 121 இடங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 122 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான மனுத்தாக்கல் தொடங்கி விட்டது. ஆனால் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும், காங்கிரஸ் இடம் பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவி வந்தது.

இறுதியாக பா.ஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டது. அதன்படி பா.ஜ, முதல்வர் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களையும், மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, முன்னாள் முதல்வரும் ஒன்றிய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியால் நிறுவப்பட்ட இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலா 6 இடங்களில் போட்டியிடுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் பா.ஜ கூட்டணியில் நடந்த இந்த தொகுதி பங்கீடு கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிருப்தியை குறைக்க நேற்று பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜாவின் இல்லத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான நிதின் நபின், ஜிதன் ராம் மஞ்சி, உபேந்திர குஷ்வாஹா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது சிராக் பஸ்வான் கட்சிக்கு இணையாக தொகுதி ஒதுக்கும்படி அவர்கள் வலியுறுத்தினர். மேலும் சில தொகுதிகளை மாற்றித்தரும்படியும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இன்னொரு புறம் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து முடிவுக்கு வரமுடியாமல் திணறல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பதால் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத், தேஜஸ்வி ஆகியோர் திணறிய நிலையில் உள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் நேற்று டெல்லி சென்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், பீகார் கட்சியின் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு, பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், பீகார் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கான் ஆகியோரை தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசினார். இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 243 தொகுதியிலும் வேட்பாளர்கள்

பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பசு பாதுகாவலர்களை வேட்பாளர்களாக நிறுத்தப் போவதாக உத்தரகாண்டில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று அறிவித்தார். எங்கள் வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களின் வேட்புமனு செயல்முறை முடிந்ததும் அவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்றார்.

* மன்னிச்சுடுங்க...

பா.ஜ கூட்டணியில் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிக்கு வெறும் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘உங்கள் (கட்சியினர்) அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தொகுதி ஒதுக்கீடு விசயத்தில், உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தொகுதி பங்கீடு முடிவுக்குப் பின்னால் இருக்கும் கட்டுப்பாடுகளையும், வரம்புகளையும் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். காலப்போக்கில் இதற்கான காரணங்கள் தெரியவரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* பீகார் எல்லையில் 43 சோதனைச்சாவடிகள்

ஜார்க்கண்ட் எல்லை வழியாக பீகாரில் சட்டவிரோதமாக பணம், மதுபானம் கொண்டு செல்வதைத் தடுக்க 43 எல்லை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் முடியும் வரை அங்கு சோதனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும் 65 வேட்பாளர்கள் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

ஜன் சுராஜ் கட்சி சார்பில் போட்டியிடும் மேலும் 65 வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். முதல் பட்டியலில் 51 பேரும், நேற்று வெளியான 2வது பட்டியலில் 65 பேரும் என மொத்தம் 116 தொகுதிக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவை எதிர்த்து ரகோபூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அதே போல் பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதும் அறிவிக்கப்படவில்லை.

* 2ம் கட்ட தேர்தல் நடக்கும் 122 தொகுதிகளில் மனுத்தாக்கல்

பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள 122 தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் சேந்நு தொடங்கியது. நவம்பர் 11 ஆம் தேதி அங்கு ஓட்டுப்பதிவு நடைபெறும். இந்த தொகுதிகளில் போட்டியிட அக்.20 வரை மனுத்தாக்கல் செய்யலாம். மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 23 ஆகும்.