பாட்னா: பீகார் பேரவை தேர்தலில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். கடந்த மே மாதம் தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்காவுடன் உறவில் இருப்பதாகவும், அவரையே திருமணம் செய்யவிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தேஜ் பிரதாப் பதிவிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி லாலு பிரசாத் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் தேஜ் பிரதாப் யாதவ் நேற்று கூறுகையில்,‘‘வரும் பீகார் சட்டபேரவை தேர்தலில் வைஷாலி மாவட்டம், மஹுவா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன்.இந்த முறை, நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார். எந்த அரசாங்கம் அமைந்தாலும், அவர்கள் இளைஞர்கள், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் பற்றிப் பேசினால், தேஜ் பிரதாப் யாதவ் அவர்களுடன் முழு பலத்துடன் நிற்பார். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. என்னுடைய சமூக வலைதளமான டீம் தேஜ் பிரதாப் யாதவ் தளத்தில் ஏராளமானோர் இணைந்துள்ளனர்’’ என்றார்.