பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்; ஒரு தொகுதிக்கு 23,000 பேரை நீக்கியது தேர்தல் ஆணையம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்து வருகிறது. இந்த சிறப்பு தீவிர திருத்தம் 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. 2003ஆம் ஆண்டுக்குபிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்கள் தங்கள் ஆவணத்தை வழங்க நாளை கடைசி நாளாகும்.
தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கைப்படி,’ தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 20 லட்சம் பேர் இறந்துள்ளனர். 28 லட்சம் பேர் தற்போது வேறு மாநிலத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் பீகாரில் வாக்களிக்கத் தகுதியற்றவர்கள். மேலும் ஏழு லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போதைய பட்டியலில் கூடுதலாக ஒரு லட்சம் பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையில், மேலும் 15 லட்சம் வாக்காளர்கள் சரிபார்ப்பு படிவங்களை திருப்பி அனுப்பவில்லை. அதாவது அவர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
பீகார் வாக்காளர் இறுதிப் பட்டியல் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியலில் இருந்து நேற்று வரையுள்ள கணக்குப்படி மட்டும் 56 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டால், ஒரு தொகுதிக்கு சராசரியாக 23,045 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 10 முக்கிய தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து, அதாவது தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து 56 லட்சம் பேரை நீக்குவது கூட ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. ஏனெனில் 2020 தேர்தலில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 52 இடங்களை 5,000 அல்லது அதற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், 40 இடங்களை 3,500 அல்லது அதற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் இழந்தது. இதனால் தற்போது மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.